

கரோனாவுக்கு இன்று 49 பேர் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சையில் 668 பேர் உள்ளனர். சிகிச்சை பெற்று வந்தோரில் 785 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சையில் உள்ளோரில் நூறு பேரை ஜிப்மருக்கு மாற்ற புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்றால் மொத்தமாக 1,468 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 785 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 665 பேர் சிகிச்சையில் உள்ளனர். 16 பேர் இறந்துள்ளனர். இன்று 49 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியின் தற்போதைய நிலை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் உள்ளன. அங்கு 400 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் இருந்து 100 பேரை ஜிப்மருக்கு மாற்றக் கடிதம் அனுப்பியுள்ளோம். தூய்மை செய்யும் பணிகளில் பிரச்சினை வருவதால் இம்முடிவை எடுத்துள்ளோம்.
அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா 25 பேரை மாற்ற உள்ளோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி, படுக்கைகள் தராமல் மறுப்புத் தெரிவிப்பதால் எழுத்துபூர்வமாகக் கடிதம் அனுப்ப உள்ளோம். பரிசோதனை முடிவுகளை விரைவாகத் தரவும், பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்த உள்ளோம். எம்எல்ஏக்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பரிசோதனை நடத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
எம்எல்ஏக்கள் சிபாரிசில் ஆஷா பணியாளர்கள் நியமனம்?
சுகாதாரப் பணியில் புதுச்சேரியில் ஆஷா பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் சுகாதார நடவடிக்கைப் பணிகளில் ஈடுபடுகி்றனர். அவர்களுக்கு மத்திய அரசே மாதந்தோறும் தொகுப்பூதியம் தருகிறது. விழிப்புணர்வுப் பணிகளுக்குத் தனி ஊக்கத்தொகை உண்டு.
தற்போது கரோனா தொற்றுக் காலத்தில் நபர்களைக் கண்டறிதல், நோய் எதிர்ப்பு மாத்திரை தருதல், கர்ப்பிணிகள், முதியோர், நீரிழிவு, ரத்த அழுத்த நோய் பாதிப்பாளர்களைக் கண்டறியும் பணி நடக்கிறது. தற்போது மீண்டும் ஆஷா பணியாளர்களைக் கூடுதலாக அரசு நியமிக்க உள்ளது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் சிபாரில் வருவோரை நேரடியாக ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஆஷா பணியாளர்களாக நியமிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.