தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு

கோவை ஜம்புகண்டி வனப்பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஆண் யானை. கோப்புப்படம்
கோவை ஜம்புகண்டி வனப்பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஆண் யானை. கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை வனச்சரகங்களில் கடந்த 6 மாதங்களில் 15 யானைகள் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதில், சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 8 யானைகள் உயிரிழந்தன. இந்நிலையில், யானைகளின் பிறப்பு, இறப்பு, மனித- விலங்கு மோதல் உள்ளிட்டவை குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

’’முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மதுரை, தருமபுரி, விருதுநகர், வேலூர் வனக்கோட்டங்கள் எனத் தமிழகம் முழுவதும் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் நிகழ்ந்த மனித- விலங்கு மோதல்களைக் கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்ததில், வனத்துக்கு வெளியே விவசாய நிலங்கள், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

யானைகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்தவும், இறப்பைக் குறைக்கும் நோக்கிலும், மனித-விலங்கு மோதலைத் தடுக்கவும் விரிவான ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராகக் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவவலர் சேகர் குமார் நீராஜ், உறுப்பினர் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலர் எஸ்.ஆனந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவின் உறுப்பினர்களாகப் பெங்களூருவைச் சேர்ந்த யானைகள் ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், சென்னையைச் சேர்ந்த நிபுணர் சிவ கணேசன், சென்னை இந்திய-அமெரிக்கன் சொசைட்டியின் நிர்வாக அறங்காவலர் அறிவழகன், தேனியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் எம்.கலைவாணன், சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் ஏ.பிரதீப், கோவை டபிள்யு.டபிள்யு.எஃப் அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன், நிதின் சேகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகுமார், மத்திய வனக் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழகக் காடுகளில் யானைகள் நடமாட்டம், அவற்றின் வாழ்விடத்தை மறுசீரமைத்தல் குறித்து ஆராய்வார்கள்.

மேலும், மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கான வழிமுறைகள், யானைகளின் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை குறித்தும் ஆராய்ந்து, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலரிடம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிப்பார்கள்’’. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in