

தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு வணிகர்கள், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பே காரணமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் இறுதியில் தொடக்கத்திலேயே கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறியது. பின்னர் படிப்படியாக குறைந்து ஆரஞ்சு மண்டலமாகியது.
இந்நிலையில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டத்தினர் வருகையால் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. பாதிப்பு எண்ணிக்கை இதுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களைப்போல் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துசெல்லாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 787 ஆக இருந்தது. இதில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது.
தென் மாவட்டங்களை விட கரோனா பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு காரணம் வணிகர்கள், பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு தான். திண்டுக்கல் மாவட்டத்தின் பல நகரங்களில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைதிறப்பு நேரத்தை குறைத்துக்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் நகரில் நகைக்கடை, எலக்டிரிக்கல் கடை உரிமையாளர்கள் பத்து நாட்கள் முழு அடைப்பை தாங்களாகவே முன்வந்து செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று அதிகம் உள்ள நத்தம் தாலுகா முழுவதும் முழு ஊரடங்கை 10 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது என வணிகர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் தீர்மானித்து தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கை கடைப்பிடித்துவருகின்றனர்.
இதனால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. அரசு உத்தரவிடாதபோதும் வணிகர்கள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா தொற்று பாதிப்பை குறைக்க நடவடிக்கையில் இறங்கியதும் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று ஆயிரத்தை கடந்து செல்லாமல் கட்டுக்குள் இருப்பதற்கு காரணம்.
மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என மற்ற தென் மாவட்டங்களை விட திண்டுக்கல் மாவட்டத்தில் குறைவாக உள்ளது. கரோனா தொற்று அதிகரிக்கவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள், வணிகர்களுடன் இணைந்து செயல்படுத்திவருகிறது.