Published : 13 Jul 2020 03:05 PM
Last Updated : 13 Jul 2020 03:05 PM

5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய வகைதான்: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை

முதல்வரால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 வகையான ஆவின் தயாரிப்புகளும் புதிய வகைகள்தான். அவை ஏற்கெனவே சந்தையில் உள்ளவை எனப் பொய்யான தகவலைப் பரப்புவது விஷமத்தனமானது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் அளித்துள்ள விளக்கம்:

“ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஜூலை 7-ம் தேதி அன்று முதல்வரால் ஐந்து வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவையாவன: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்லேட் மற்றும் மேங்கோ, லஸ்ஸி, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத சமன்படுத்தப்பட்ட பால் (பிளக்சி பேக்குகளில்) மற்றும் டீ மேட் என்ற புதிய வகை பால்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி, இந்த ஐந்து பொருட்களும் ஏற்கெனவே சந்தையில் உள்ளன என்றும் ஆவின் நிர்வாகம் இந்தப் பொருட்கள் புதியவை என்று மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது என்றும் தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது மற்றும் விஷமத்தனமானது.

ஆவின் நிறுவனம், இதுவரை அதிகபட்சமாக 6% கொழுப்புச்சத்து மற்றும் 9% இதர சத்தும் உள்ள பாலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இப்போது ஆவின் டீ மேட் என்ற புதிய வகை பால் 6.5% மற்றும் 9% புரதச் சத்துகொண்டது. இந்த பால் வர்த்தக ரீதியில் டீக்கடைகள், ஹோட்டல், சமையல் வல்லுநர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லஸ்ஸியைப் பொறுத்தவரை ஆவின் நிர்வாகம் ஏற்கெனவே சாதாரண வகை லஸ்ஸி மற்றும் ப்ரோ பையோடிக் என்ற இரு வகைகளில் விற்பனை செய்து வருகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விரும்பிப் பருகும் வகையில் சாக்லேட் மற்றும் மாம்பழச் சுவைகளில் புதிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் ஆவின் மோர், சாச்சேட் பேக்குகளில் மற்றும் 200ML பெட் ஜார்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம், பெருங்காயம், எலுமிச்சை, இந்துப்பு போன்ற மூலிகைப் பொருள்களைச் சேர்த்து இயற்கையான முறையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய வகை மோரை அறிமுகப்படுத்தியுள்ளது .

நீண்ட நாள் கெட்டுப்போகாத அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் ( 4.5% கொழுப்புச் சத்து மற்றும் 8.5% புரதச் சத்தும் கொண்டது) புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பால் குளிர்சாதனப் பெட்டியைத் தவிர்த்து அறை வெப்ப நிலையில் 90 நாட்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில், பிளக்சி பேக்குகளில் ஆவின் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.

மேற்கூறிய உண்மைகளை கருத்தில் கொள்ளாமல் பொன்னுசாமி ஆவின் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதனை ஆவின் நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து புதிய பொருட்களும் சந்தைக்குப் புதியவை.

மேலும் டீ மேட் பால் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினை பொன்னுசாமி கூறியுள்ளார். இந்த பால் வணிக நோக்குடன் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிகம் பயனடையும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனை கமிஷன் ரூ. 5/- தனியார் நிறுவனம் போல தரப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதே போன்று புதிய பொருட்களை அறிமுகபடுத்த முன்வந்துள்ளன. தனியார் பாலைவிட சிறந்த முறையில் அதிக கொழுப்புச் சத்து (6.5%) கொண்ட இந்தப் பால் டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் அதிக கோப்பைகள் தயாரிக்கும் வகையில் அதிக கொழுப்பு மற்றும் புரதச் சத்து கொண்டது. ஆனால் இந்த உண்மைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

கோவிட்-19 இக்கட்டான சூழ்நிலையில், தனியார் துறையினர் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலைத் தவிர்த்த நிலையில், தமிழக அரசின் பால்வளத்துறையின் மூலம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதோடு தமிழகம் முழுவதும் சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் தங்கு தடையின்றி பால் மற்றும் பால் உபபொருள்கள் பொதுமக்களுக்கு சரியான நேரத்திற்கு விற்பனை செய்து தமிழக மக்களுக்குச் சேவை செய்து வருகிறது.

இதைப் பொறுக்க முடியாத பொன்னுசாமி போன்றோர் பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் தினமும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு சுய விளம்பரத்திற்காக, கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற நுகர்வோர்களுக்கு லாப நோக்கமின்றிச் செயல்பட்டு வரும் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பாடுகளைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்.

தமிழக மக்களுக்காக ஆவின் இந்த இக்கட்டான கரோனா தொற்று காலகட்டத்திலும் தமிழக அரசின் சீரிய வழிகாட்டுதல் மூலம் சிறப்பாகப் பணி செய்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும்”.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x