பழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

பழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.600 நிவாரணம் வழங்கக்கோரி தாக்கலான மனுவுக்கு தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பெரியசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முடியிறக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தைப்பூசம், மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் வேலை அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் வேலை குறைவாகவே இருக்கும்.

ஒரு நபருக்கு முடி இறக்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ரூ. 25 வழங்கப்படுகிறது. கரோனா காலம் என்பதால் பழனி கோவில் அடைக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகிறது. இதனால் முடியிறக்கும் தொழிலில் உள்ளவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் சம்பளமோ, நிவாரணமோ வழங்கவில்லை.

எனவே, இந்த கரோனா ஊரடங்கு காலத்தை பேரிடர் காலமாக கருதி பழனி கோவில் முடியிறக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.50,000 வங்கிக் கடன் மற்றும் தினமும் ரூ.600 நிவாரணம் வழங்கவும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், பழனி கோவில் முடியிறக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in