Published : 13 Jul 2020 01:34 PM
Last Updated : 13 Jul 2020 01:34 PM

நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது போல் பருத்திக்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கும் கரும்பிற்கும் ஆதார விலையை நிர்ணயம் செய்வது போல் பருத்திக்கும் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் கொள்முதல்போல் வாரம் முழுவதும் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா தொற்றுநோய் காரணமாக உலகமே முடங்கி உள்ளது. அதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி மிகுந்த பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால், விவசாயம் மட்டும்தான் எந்தவிதமான தடங்களும் இன்றி நடைபெற்று நமது அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்திசெய்து கொண்டு இருக்கிறது.

விவசாயத்தில் நெற்பயிருக்கு அடுத்ததாக கரும்பு, வாழை, பருத்தி சாகுபடிதான் விவசாயிகளுக்குக் கைகொடுக்கிறது. தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவு கூட விளைந்த கரும்பிற்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் பரவலாகப் பருத்தி சாகுபடிக்கு மாறினார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் சென்ற 2019 ஆம் ஆண்டு 41,000 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 72,000 ஹெக்டேராக உயர்ந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போழுது பருத்தி அறுவடை நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், திருப்பனந்தாள், நாகை மாவட்டத்தில் குத்தாலம், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், பூந்தோட்டம், குடவாசல் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் ஏலம் முறையில் பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஏலம் கூட வாரத்தில் ஒருநாள்தான் நடைபெறகிறது. அதிகமான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அதிக அளவு விவசாயிகள் ஒரே நேரத்தில் கொண்டு வரும்போது அனைவரும் ஏலத்தில் பங்கேற்க முடியாமல் போகிறது. அதோடு பருத்தியை அங்கேயே வைக்க முடியாமலும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமலும் இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் தவிக்கின்றனர்.

தற்பொழுது சில இடங்களில் மழை பெய்துகொண்டு இருக்கின்ற காரணங்களில் மழையில் பருத்தி நனைந்து வீணாகும் சூழலும் ஏற்படுகிறது. இந்த வருடம் தமிழக விவசாயிகளின் பல்வேறு முயற்சியினால் அவர்களது கோரிக்கையை ஏற்று இந்திய பருத்தி கழகம் பருத்தி கொள்முதலில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது. இருந்த பொழுதும் அவர்கள் 8 முதல் 12 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.5500-க்கும் 13 சதவீதம் வரை உள்ள பருத்தியை ரூ.5278-க்கும் கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால், ஈரப்பதத்தைக் காரணம் காட்டி 60 சதவிகிதம் பருத்தியைத்தான் கொள்முதல் செய்கின்றனர். அதனால் தனியார் வியாபாரிகளின் மறைமுக ஏலத்தில் பருத்தியைக் குறைவான விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ.3000 முதல் ரூ.3600-க்கு மேல் விலை கொடுப்பதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் துயரத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஆகவே, தமிழக அரசு நெல்லுக்கும் கரும்பிற்கும் ஆதார விலையை நிர்ணயம் செய்வது போல் பருத்திக்கும் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் கொள்முதல் போல் வாரம் முழுவதும் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பருத்திக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8000 நிர்ணயிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உழைப்பிற்கான ஆதாயத்திற்கான விலை கிடைக்கும்.

விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். ஆகவே தமிழக அரசு பருத்தி விவசாயிகளின் நிலை அறிந்து பருத்திக்கான ஆதார விலையை நிர்ணயித்து அரசு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x