ஆம்பூரில் வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்: டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமனம்

ஆம்பூரில் வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்: டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமனம்
Updated on
1 min read

ஆம்பூரில் போலீஸார் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆம்பூரில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது முகிலன் (27) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். போலீஸார் இவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். வாகனத்தைத் திருப்பித் தருமாறு அந்த இளைஞர் போலீஸாரைக் கேட்டுள்ளார்.

திருப்பித் தர மறுத்ததால் உடனடியாக அந்த இளைஞர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் திரும்பி வந்து போலீஸார் கண்முன்னே தீக்குளித்துள்ளார். உடனடியாக இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரிந்த காவலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அங்கு பணியாற்றிய காவலர்களைப் பணியிட மாற்றம் செய்தனர்.

மேலும் விசாரணைக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரவீன் குமார் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தரப்பிலிருந்து விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தின் சிசிடிவி பதிவுகளை அவர் பார்த்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in