

கரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதயம், நுரையீரல், சிறுநீரகம், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு தனியார் மருத்துவ மனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன.
தென்மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வந்தால், அவர்களிடம் நீரிழிவு, இதயம் உள்ளிட்ட வேறு நோய்கள் ஏதும் உள்ளதா? என விசாரிக்கின்றனர். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஆனால் வேறு நோய்கள் இன்றி கரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். வேறு நோய்களுடன் வரும் கரோனா நோயாளிகளை அனுமதித்து அவர் கள் இறந்துவிட்டால் பிரச்சினை ஏற்படும், மேலும் சிகிச்சைக்கான கட்டணங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்தில் தனியார் மருத்துவமனை கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளின் நிலை இவ்வாறு இருக்கையில், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்து வமனைகளிலும் சிறப்புச் சிகிச்சை அளிப்பதில்லை. கரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் இறப்பது அதிகரித்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சர்க்கரை நோய் மருத்துவர் எஸ்.சாதிக்அலி கூறியதாவது:
நீரிழிவு, உயர் அழுத்தம், இதயம், நுரையீரல், சிறுநீரகம், ஹெச்ஐவி நோயாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கரோனா எளிதில் தாக்கும். இவர்களுக்கு கடும் பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் இந்நோயாளிகள் கரோனா தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர்.
இதேபோல் சர்க்கரை நோயாளிகள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கரோனோ தொற்று சர்க்கரை அளவை மிக அதிகமாக்கிவிடும். அதனால் சர்க்கரை நோயாளிகள் இறக்க அதிக வாய்ப்புள்ளது.
இவர்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறை களைக் கையாள வேண்டும் எனத் தெரிவித்தார்.