

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்
இதன் தொடர்ச்சியாக சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் உத்தரவிட்டார்.
இதேபோல், நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் துறையினர் 11 பேர் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்துள்ள ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் ஓர் அறையைத் தங்கள் அலுவலகமாக மாற்றினர். இந்த வழக்கு தொடர்பாக பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அந்த அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸாரை காவலில் எடுக்க ஓரிரு நாளில் மதுரை தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை 5.15 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்தனர். காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள ஆவணங்கள், வியாபாரிகளை தாக்கியதாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணை முழுவதையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.