

சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,460 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,520 ரூபாயும் ஆதாரவிலையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதேபோல், நியாய விலைக் கடைகளில், குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தினை மேலும் ஓராண்டுக்கு அதாவது 30.9.2016 வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்களின் வாழ்வு வளம் பெற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
விவசாய இடுபொருட்களை உரிய காலத்தே வழங்குதல், தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்குதல், நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களுக்குத் தேவையான மானியம் வழங்குதல், வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துதல், புதிய உத்திகளையும் தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் கடைபிடிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தல் என பல்வேறு உத்திகளை கடைபிடிப்பதன் காரணமாக உணவு தானிய உற்பத்தியில் ஆண்டு தோறும் புதிய சாதனைகளை தமிழ்நாடு படைத்து வருகிறது.
வேளாண் உற்பத்தியை பெருக்குவதோடு விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட்டால் தான் வேளாண் பெருமக்களின் வாழ்வு வளம் பெறும்.
இந்த அடிப்படையிலேயே, மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையுடன் கூடுதலாக ஊக்கத் தொகையை எனது தலைமையிலான அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயம்:
நடப்பு காரிஃப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,450 ரூபாய் எனவும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,410 ரூபாய் எனவும் மத்திய அரசு நெல்லுக்கான ஆதார விலையை நிர்ணயித்துள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,410 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 50 ரூபாய் வழங்கவும்; சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,450 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 70 ரூபாய் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,460 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,520 ரூபாயும் வழங்கப்படும். நெல்லுக்கான இந்த புதிய கொள்முதல் விலை 1.10.2015 முதல் நடைமுறைப்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.