

திருச்சி: இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியவுடன் வெளி மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த பல லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது அவர்களில் பலர் எந்த வேலையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் துயர் துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார் திருச்சி தேசியக் கல்லூரி இயக்குநர் முனைவர் கே.அன்பரசு.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்காக ‘ஜாப் பார்க்’ (JOB PARK) என்ற செயலியை உருவாக்கியுள்ளேன். இதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலை வழங்குபவர்களும் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆன்ட்ராய்ட் செல்போன் இல்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று www.jpark.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது என்றார். பெ.ராஜ்குமார்