Last Updated : 12 Jul, 2020 07:32 PM

 

Published : 12 Jul 2020 07:32 PM
Last Updated : 12 Jul 2020 07:32 PM

உ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி: தந்தை பெருமிதம்

உ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் தன் மகன் திகழ்கிறார் என்று கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமாரின் தந்தை பிரபு 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

2018-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தார் தமிழக ஐபிஎஸ் அதிகாரி பி.தினேஷ்குமார். துப்பாக்கி மோதலுக்குப் பின் 3 தீவிரவாதிகளை அவர் பிடித்த வீர தீரச் செயலுக்காக 2019-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உ.பி. அரசால் கவுரவிக்கப்பட்டார்.

தற்போது நாட்டையே அச்சுறுத்திய ரவுடி விகாஸ் துபேவைச் சுட்டுக் கொன்ற விவகாரத்திலும் கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமார் முக்கியப் பங்கு வகித்ததாகப் பாராட்டப்படுகிறார்.

எஸ்.பி.தினேஷ்குமார்

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதண்டாவைச் சேர்ந்த விவசாயி பிரபு (63) - சுப்தரா (54) தம்பதியரின் ஒரே மகன் தினேஷ்குமார் (33). இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, சமீபத்தில் கான்பூர் மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் தந்தை பிரபு, 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

"சேலம் மாவட்டம், கொளத்தூர், லக்கம்பட்டி, சின்னதண்டாவில் எங்களுக்குச் சொந்தமான சொற்ப நிலத்தில், பூர்வீகமாக விவசாயத் தொழில் செய்து வருகிறேன். எனது மகன் தினேஷ்குமார் ஆரம்பக் கல்வியை மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளி, சேலம் வித்யாமந்திர் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை கங்கா மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். கால்நடை மருத்துவப் படிப்பில் சேர ஆர்வமுடன் காத்திருந்த தினேஷ்குமாருக்கு ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பு நழுவியது. அதன்பின், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வேளாண்மைப் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

இளம் வயதில் தினேஷ்குமார் சுறுசுறுப்பாகவும், விளையாட்டு ஆர்வத்துடனும் இருப்பார். மாவட்ட அளவிலான ஹாக்கி அணியில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வரும் தினேஷ்குமார், எனக்கு ஒத்தாசையாக விவசாய வேலை செய்து கொடுப்பார். உழவு மாடுகளை ஏர் கலப்பையில் கட்டி நிலத்தில் ஏர்பிடித்து உழவு செய்வது தினேஷ்குமாருக்குத் தனி விருப்பம். அமைதியை விரும்பும் அவர், அடிக்கடி தோட்டத்தில் இருந்து வெகுதூரம் நடந்து சென்று வீடு திரும்புவார்.

சிறு வயதில் அடிதடி, வம்பு தும்புகளில் ஈடுபடுபவர்களின் பக்கமே செல்லமாட்டார். ஆனால், தனக்கு தவறு என மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறும் சுபாவம் கொண்டவர். யாராவது அவரிடம் பொய் பேசி விட்டால், அவரை விட்டு ஒதுங்கிவிடுவார். அந்த அளவுக்கு உண்மை பேச வேண்டும் என்பதில் தினேஷ்குமார் உறுதி மனம் பூண்டவர். நியாயத்துக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருவதால், காவல் துறையில் நேர்மையான முறையில் பணியாற்றிட முடிகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தினேஷ்குமார் முதல் முயற்சியில் வெற்றி பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சியைக் காட்டிலும், இப்போது அதிகம் மகிழ்ச்சியை உணர்கிறேன். 2018-ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதல்வரைக் கொல்ல முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகளை என் மகன் தினேஷ் குமார் உயிருடன் பிடித்தார். இதற்காக உ.பி.அரசு பதக்கம் வழங்கி, பாராட்டிக் கவுரவித்தது.

தற்போது, ரவுடி விகாஸ் துபேவை ஒழித்துக்கட்டிய செய்திகளைப் படிக்கும் போதும், ஊடகம் வாயிலாக காணும்போதும், அதில் முக்கியப் பங்கு வகித்த என் மகனின் செயல், அவரது பெற்றோராகிய எங்களுக்கு தாளாத இன்பத்தை அளிக்கிறது. பத்து நாட்களுக்கு ஒரு முறை எங்களுடன் அலைபேசியில் பேசும் தினேஷ்குமார், வேலைப் பளு காரணமாக தொடர்பு கொண்டு பேசவில்லை. நாங்களும் அவரின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அவருடன் பேசவில்லை.

புத்தகப் பிரியரான தினேஷ்குமார் பள்ளிக் காலம் தொட்டு, கல்லூரி காலம் வரையிலும் ஏராளமான ஆங்கில நாவல்களையும், உலக பொது விஷயங்கள் சம்பந்தமான நூல்களையும் விரும்பிப் படிப்பார். ஷேக்ஸ்பியர் நூல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து படிப்பார். கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு ஜான்சியில் எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றிருந்தபோது, என்னையும், அவரது தாய் சுபத்ராவையும் உடன் அழைத்துச் சென்று, பழமையான கோட்டை, கோயில்களைக் காட்டினார். அவர் ஊருக்கு வந்தபிறகு, வீட்டில் அம்மாவுக்கு உதவியாக சப்பாத்தி சுடுவதும், நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பது என சந்தோஷம் களைக்கட்டும். மகன் வீட்டுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன என்ற ஏக்கத்தில் அவரது தாய் சுபத்ரா உள்ளது மட்டுமே கவலையளிக்கிறது.

'மகன் வீட்டுக்கு வரவில்லை என்றால், என்ன, நாடு முழுவதும் மீடியாக்களிலும், நாளிதழ்களிலம் அவரது புகைப்படமும், வீரதீரச் செயல்களும் செய்தியாக வெளிவருவதைப் பார்த்துப் பார்த்து மனம் ஆறுதல் கொள்கிறன்' என சுபத்ரா தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வருகிறார்.

எது எப்படியோ நாட்டு மக்களை அச்சுறுத்தும் தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு என் மகன் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். விளைநிலங்களில் களைகளைப் பறித்துப் பழக்கப்பட்டதால், சமுதாயத்தில் புரையோடிய அட்டூழியக்காரர்களை வேர் அறுப்பதிலும் வல்லவர் என நிரூபித்துள்ளார். அராஜகக் கும்பலுக்கு என் மகன் தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்து வருவது பெருமையாக உள்ளது".

இவ்வாறு பிரபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x