

தந்தை, மகன் மரண வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையில் 6 சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 12) மாலை 4.20 மணியளவில் 2 கார்களில் சாத்தான்குளம் நோக்கி கிளம்பினர். இவர்கள் மாலை 5.15 மணியளவில் சாத்தான்குளம் வந்தனர்.
நேராக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி இரவு கைது செய்த பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள ஆவணங்கள், வியாபாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விசாரணை முழுவதையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்ததுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றும் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், முத்துமாரி ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்த விசாரணை இரவு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.