

கரோனா 'ஹாட் ஸ்பாட்' வார்டுகள் மற்றும் நோய் பாதித்த வீடுகளில் தூய்மைப் பணியாளர்கள் அருகே செல்லாமல் 20 அடி தூரத்தில் நின்று ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ரோபாட்டை மதுரையைச் சேர்ந்த இளம் பொறியாளர் கண்டுடித்துள்ளார்.
மதுரையில் கரோனா தொற்று நோய் வேகமாகப் பரவும் நிலையில், நோய் பாதித்த வார்டுகளுக்குள் சென்று நோயாளிகள் வசித்த, வசிக்கும் குடியிருப்புகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அவர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்றாலும் இந்தப் பணியில் ஈடுபட்ட பலருக்கு இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
அதனால், தூய்மைப் பணியாளர்கள் இன்னும் பாதுகாப்புடன் கிருமிநாசினியைத் தெளிக்க மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த இளம் மெக்கானிக்கல் பொறியாளர் ஆர்.சுந்தரேசன் (வயது 35), ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய ரோபோட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
"20 அடி தூரத்தில் இருந்து இந்த ரோபோட்டை எளிதாக இயக்கி கிருமிநாசினி தெளிக்கலாம். 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ரோபோட், கிருமிநாசினி கருவியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்" என்கிறார் சுந்தரேசன்.
அவர் கூறுகையில், "பொதுவாக கிருமிநாசினி தெளிப்பான்களைப் பக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். ஆனால், நான் கண்டுபிடித்த இந்த ரோபோட், கிருமிநாசினி கருவியை செல்போன் மூலமே இயக்கலாம். அதற்கான 'ஆப்'-ஐ ஆண்ட்ராய்டு போனில் தரவிறக்கம் செய்து 20 மீட்டர் தொலைவில் இருக்கிற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், நோயாளிகள் வீடுகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மிக எளிமையாக, பாதுகாப்பாக இந்த ரோபோட்டைக் கொண்டு கிருமிநாசினியைத் தெளிக்கலாம்" என்றார்.
தற்போது காற்று மூலம் கரோனா பரவும் எனக் கூறப்படுவதால் காற்றிலும், நீரிலும் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கவும் மற்றொரு இயந்திரத்தையும் சுந்தரேசன் கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் 'ஹைபிரிட் சானிடைசர்' எனப் பெயர் வைத்துள்ளார்.
இந்த இயந்திரம், காற்றின், நீரின் தன்மையை மாற்றாமல் கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டவை. இந்த இயந்திரத்தை வீட்டில் டேபிள் பேன் போல் ஒரு மேஜையில் வைத்து அதனை குடிநீர் கேனுடன் இணைக்க வேண்டும். சுவிட்ச் 'ஆன்' செய்தால் இந்தக் கருவி வெளியே உள்ள காற்றை உள்ளே இழுத்து, அதில் உள்ள ஆக்சிஜனை ஓசோனாக மாற்றி காற்று, தண்ணீரில் சுற்றியிருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும். அதன்பிறகு தானாகவே அந்த ஓசோன் தண்ணீரில் கலந்து ஆக்சிஜனாக மாறிவிடுகிறது.
சாதாரண கிருமிநாசினி தெளித்தால் அப்பகுதியில் உள்ள காற்று சுவாசிப்பதற்கே உகந்ததாக இருப்பதில்லை என்று கூறும் பொறியாளர் சுந்தரேசன், தான் கண்டுபிடித்துள்ள இந்தக் கருவி சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்கிறார்.
இந்த இரண்டு கருவிகளுக்கும் மத்திய அரசின் மருத்துவ உபகரணங்கள் தரம் மற்றும் தயாரிப்பை அங்கீகரிக்கக்கூடிய நிறுவனம் தரச்சான்று வழங்கியுள்ளதாக கூறும் பொறியாளர் சுந்தரேசன், அரசு அனுமதித்தால் கரோனா பாதித்த மாநகராட்சி வார்டு பகுதிகளில் இந்தக் கருவியைப் பயன்படுத்த உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.