

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம்துறை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளது. இதனால் அவ்வப்போது கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. இதைத் தடுக்க அரசு தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் அருண்தாஸ் 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசுகையில், "எங்கள் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகாலக் கோரிக்கை. அரசு அதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் சிலரின் போராட்டத்தால் அது கிடப்பில் போனது. முன்பெல்லாம் கடல் தண்ணீர் எங்கள் ஊருக்குள் வந்ததே இல்லை. ஆனால், இப்போதெல்லாம் அடிக்கடி ஊருக்குள் கடல் தண்ணீர் வந்துவிடுகிறது. இதனால் எப்போது ஊருக்குள் தண்ணீர் வருமோ என்னும் பதைபதைப்பிலேயே இரவு தூங்கவும் முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. குழந்தைகள் ஊருக்குள் கடல் தண்ணீரைப் பார்த்ததும் மிரண்டுபோகிறார்கள்.
பக்கத்து கடற்கரைக் கிராமமான முட்டத்தில் தனியார் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. அதேபோல் இன்னொரு அருகமை கிராமமான பெரியகாடு கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருக்க தூண்டில் வளைவு அமைத்துள்ளனர். இதனால் இங்கெல்லாம் கடல் நீர் ஊருக்குள் புகுவதில்லை. ஆனால் எங்கள் ஊரில் எந்த தடுப்பு வசதிகளும் இல்லாததால் அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் வந்துவிடுகிறது.
அத்துடன் அந்தக் கிராமங்களில் துறைமுகம், தூண்டில் வளைவுகள் இருப்பதால் கடல் அளவைத்தாண்டி செல்லமுடியாத நீர், அதன் மற்றொரு புறத்தில் இருக்கும் எங்கள் ஊரின் வழியே வெளியே வருகிறது. அதனால் எங்கள் ஊரிலும் தூண்டில் வளைவு அமைத்தால் கடல் நீர் ஊருக்குள் புகுவதில் இருந்து மக்களைக் காப்பாற்றலாம். ராஜாக்கமங்கலம்துறையில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் வசிக்கும் மக்களை காக்கும் வகையில் அரசு இதை உடனடியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார்.