ஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்

ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரம்.
ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரம்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தைச் சுகாதாரமான ஊராக மாற்றும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் ஏம்பல் கிராமம் உள்ளது. ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கடந்த ஆண்டு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ரூ.1.65 லட்சத்தில் ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவிகள், ரூ.1.25 லட்சத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டில் ஈ.சி.ஜி. பரிசோதனைக் கருவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கூடுதல் படுக்கைகள், மின்விசிறிகள், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நேரத்திலும் சுமார் 34 பேரிடம் இருந்து நிதி திரட்டி ரூ.2.69 லட்சத்தில் ஹைடெக் எக்ஸ்ரே இயந்திரம் தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியினால் அரசிடம் இருந்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, மகப்பேறு பிரிவுக்கான பிரத்யேகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அலைச்சல், தாமதமின்றி ஒரே இடத்தில் விரைந்து சிகிச்சை பெறுவதற்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். உள்ளூரில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசையே எதிர்பாராமல் பொதுமக்கள் பங்களிப்புச் செய்வது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in