Last Updated : 12 Jul, 2020 03:51 PM

 

Published : 12 Jul 2020 03:51 PM
Last Updated : 12 Jul 2020 03:51 PM

புற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை

பிரதிநிதித்துவப் படம்

மதுரை

புற்றுநோயாளிகள் ஹீமோதெரபிக்காக அண்டை மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் செல்வதற்கு இ-பாஸ் கொடுப்பதில் கெடுபிடி காட்டுகின்றன மாவட்ட நிர்வாகங்கள். இதனால், நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள் மற்றும் வியாழன் தோறும் புற்றுநோயாளிகளுக்கு ஹீமோதெரபி எனும் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்விரு நாட்களும் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 50 நோயாளிகள் சிகிச்சைக்காக வருவார்கள். இதுபோக மதுரையில் இரு தனியார் மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் வாரத்திற்கு மதுரைக்கு சுமாராக 300 பேர் ஹீமோதெரபிக்காக வருகிறார்கள்.

தற்போது மாவட்டம்விட்டு மாவட்டம் வருவதற்கும் இ-பாஸ் தேவை என்று விதிமுறை இருக்கிறது. அதே நேரத்தில், மதுரையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், மாவட்டத்திற்குள் வருவதற்கு யார் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தாலும் நிராகரித்துவிடுமாறு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைக்காக மதுரைக்கு வருவோரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இ-பாஸ் விண்ணப்பத்தில், மருத்துவக் காரணத்திற்காக என்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும், அதற்குரிய ஆவணங்களை இணைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருந்தும்கூட, பலரது விண்ணப்பங்களை கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கிறார்கள் அந்தப் பிரிவு ஊழியர்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி நம்மிடம் பேசுகையில், "என்னுடைய மனைவி அன்னலட்சுமியை கடந்த வியாழக்கிழமை (9.7.2020) அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஹீமோதெரபி சிகிச்சைக்காக வரச் சொல்லியிருந்தார்கள். முந்தைய நாளே வாகனம் ஏற்பாடு செய்துவிட்டு, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. வியாழக்கிழமை 4 முறை விண்ணப்பித்தேன். நான்கு முறையும் நிராகரித்துவிட்டார்கள். சரி, திங்கட்கிழமையாவது மருத்துவமனைக்குப் போய்விடலாம் என்று 13.7.2020 தேதிக்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன்.

பல முறை விண்ணப்பித்தும் இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. நாளை காலை 8 மணிக்கு நான் மதுரை அரசு மருத்துவனையில் இருக்க வேண்டும். இன்று மதியம் 2 மணி வரையில் அனுமதி கிடைக்கவில்லை. கரோனாவில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, உயிர்காக்கும் சிகிச்சைக்கு அனுமதி மறுப்பது அநியாயமில்லையா?" என்றார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரும், மருத்துவருமான டி.ஜி.வினயிடம் கேட்டபோது, "மருத்துவக் காரணங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி கொடுத்துவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். எனவே, நீங்கள் கூறும் நபரை திரும்பவும் விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். பரிசீலிக்கிறோம்" என்றார்.

நாமும் அதனை மாயாண்டியிடம் தெரிவித்து விட்டோம். அவர் மீண்டும் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x