Last Updated : 12 Jul, 2020 02:10 PM

 

Published : 12 Jul 2020 02:10 PM
Last Updated : 12 Jul 2020 02:10 PM

புதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப் பறிப்பு: சமூக ஜனநாயக இயக்கங்கள் குற்றச்சாட்டு

தனவேலு: கோப்புப்படம்

புதுச்சேரி

தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாததால் அரசு மீதான அதிருப்தியைத் திசை திருப்பவே புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப் பறிப்பு நடந்துள்ளதாக சமூக ஜனநாயக இயக்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு சுமத்தியத்துடன் கடுமையாக விமர்சித்து வந்தார். அரசு கொறடா அனந்தராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் சிவக்கொழுந்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனவேலுவுக்கு ஆதரவாகக் கடைகள் அடைப்பு, போராட்டம், முதல்வர் உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், அவர் பதவிப் பறிப்புக்கு சமூக ஜனநாயக இயக்கங்களும் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகந்நாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், தமிழர் களம் செயலர் அழகர், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ரகுபதி உட்பட 12 அமைப்பினர் கூறியதாவது:

"பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேல் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தவும், மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தரவும் கோரி போராட்டம் நடத்தினார். துணைநிலை ஆளுநரைச் சந்தித்தார்.

இதனால், அவர் மீது காழ்ப்புணர்வு கொண்ட முதல்வர் நாராயணசாமி அவரை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகாமல் தொகுதி மக்களின் நலனுக்காகப் போராடியதற்காகக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த அடிப்படை சட்டப் புரிதல்கூட இல்லாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது.

சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்வதற்கு முன் தனவேலுவிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறியதை அப்பட்டமாக மீறியுள்ளனர். மேலும், விசாரணைக்குப் போதிய கால அவகாசம் கேட்டும் அளிக்காமல் நடவடிக்கை எடுத்தது இயற்கை நீதிக்கு எதிரானது.

அரசுக்கு எதிராக ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பியும், சிலர் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனவேலு மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது உள்நோக்கம் கொண்ட செயல்.

தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாததால் ஆளும் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனைத் திசைத் திருப்பவே பதவிப் பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x