Published : 12 Jul 2020 12:17 PM
Last Updated : 12 Jul 2020 12:17 PM

கரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் உத்தரவு; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குத் தேவையான மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இன்றைய சூழலில், பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுக் குறைவான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் கோவிட் பராமரிப்பு மையங்களிலும், மிதமான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் கோவிட் நல மையங்களிலும், தீவிரத் தொற்று அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் கோவிட் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவர்களின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இக்கருவியை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகளைக் தொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

இக்கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் கரோனா தொற்று மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க உதவும்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x