

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ஒயிலாட்டக் கலைஞர் பெ.கைலாசமூர்த்தி (75) காலமானார். தூத்துக்குடி மட்டக்கடை அய்யலு தெருவில் மனைவி நவநீத சுந்தரியுடன் இவர் வசித்து வந்தார். உள்ளாட்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தன் வாழ்நாள் முழுவதும் ஒயிலாட்டக் கலையை வளர்த்து வந்தார். இவருக்கு தமிழக அரசு கடந்த 2009-ல் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மாவட்ட அளவிலான கலைநன்மணி உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
கைலாசமூர்த்தியின் உடலுக்கு பல்வேறு கட்சியினர், நாட்டுப்புறக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இல்லத்தில் நேற்று பிற்பகலில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர் திரேஸ்புரம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.