

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்சனை வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12-ம் தேதி நாள் முழுவதும் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகக் கூறி அவற்றை கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் திமுக எம்எல்ஏக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பேரவைக்குள் கொண்டு வந்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை உரிமைக்குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21எம்எல்ஏக்களும் கடந்த 2017 செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை பிறப்பித்திருந்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்த தடை உத்தரவை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலர் தரப்பில்தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “பேரவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 21 பேரும் பேரவைத் தலைவரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட குட்காவை அவைக்குள் கொண்டுவந்தனர். அதனால் அவர்கள் மீதுநடவடிக்கை எடுப்பதற்காக சட்டப்பேரவை உரிமைக்குழு அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நடவடிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 2017 முதல் தலைமை நீதிபதி அமர்வில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதிஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, இதுதொடர்பாக முறையீடு செய்து ஒரு கடிதம் அளித்தனர்.
அதில், “மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்குவரவுள்ளது. எனவே, குட்கா விவகாரத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.
திமுக தயார்
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர், ‘‘இந்த வழக்கை எதிர்கொள்ள திமுகவும்தயாராகத்தான் இருக்கிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ்உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி, ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட குட்கா விவகாரத்தை தற்போது மீண்டும் கையில் எடுக்க நினைக்கிறது. இந்த வழக்கில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்’’ என தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘குட்கா விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் குறித்த வழக்கில் வரும் ஆக.12-ம் தேதி இறுதி விசாரணை நாள் முழுவதும் நடத்தப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டும்’’ என அறிவித்துள்ளனர்.