

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஜூலை 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் படிப்படியாக பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங் களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு, தளர்வில்லா முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என முதல்வர் வலியுறுத்தி வருகிறார். அதேநேரம், உள்ளூர் நிலவரத்தை அவ்வபோது ஆய்வு செய்து தேவையான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊரடங்கு முடிவிலும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு, சாத்தியமாகும் விஷயங்களை எடுத்துக் கொண்டு, அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 15-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், பள்ளிகள் திறப்பு, பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுதவிர, முதல்வர் பழனிசாமி அழைப்பின் பேரில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ள சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப் படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரி வினருக்கான இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப் பட்டோரில் கிரீமிலேயர் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத் தில் விவாதிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமைச் சர்கள் செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, கே.பி.அன் பழகன் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.