

மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்பெறும் சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தைக் கோவையில் விரைவில் தொடங்க வேண்டும் எனக் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''மத்திய சுகாதாரத் துறையின்கீழ், மருந்தகம் மற்றும் மருத்துவர்களை உள்ளடக்கிய சிஜிஎச்எஸ் எனும் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் இந்த மருத்துவ மையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இச்சேவை மாநிலத் தலைநகரங்களை மையப்படுத்தியே உள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த மருந்தகம் உள்ளது.
இதன் காரணமாக கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் இச்சேவையின் முழுப் பயனை அடைய முடியவில்லை. இந்தச் சூழலில், கோவையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தக சேவையைத் தொடங்க வேண்டும் என கோவை மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
இதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் கொங்கு மண்டலத்திற்குட்பட்ட எம்.பி.க்கள் மற்றும் கேரள மாநில பாலக்காடு எம்.பி. என ஏழு எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பினோம். கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கோவை மற்றும் மதுரையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுகாதாரத் துறை உறுதியளித்துள்ளது.
கோவை மக்களவை உறுப்பினர் என்கிற முறையிலும் இதர எம்.பி.க்களின் சார்பிலும் இதை வரவேற்கிறேன். விரைவில் சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைத்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சுகாதாரத் துறையை வலியுறுத்துகிறேன்''.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.