

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று 2000-ஐ தாண்டியது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் கரோனா தொற்றுக்கு இன்று பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1949 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,124 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தென்மாவட்டங்களில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்டம் 2000-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது ஆண், தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 50 வயது பெண் ஆகிய இருவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகம் மற்றும் பேக்கரி இன்று மூடப்பட்டது.