

மதுரை ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்று பார்வையிட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே தீவிரமாக பாதிக்கப்பட்ட ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சைப்பெறுவதற்கான ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் இருந்தது.
தற்போது மதுரை அருகே உள்ள தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக நிலைய மருத்துவ அலுவலர், மருத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் டிஜி.வினய் ஆலோசனை நடத்தினர்.
ஒரே நாளில் 10 பேர் பலி:
மதுரையில் இன்று ஒரே நாளில் 10 நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 277 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று வரை 5,353 பேர் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 533 நோயாளிகள் சிகிச்சை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அதேநேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று ஒரே நாளில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதிதாக 277 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் பிற ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் போதிய படுக்கை வசதியில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது சில நேரங்களில் மழையும், மற்ற நேரங்களில் வெயிலும், புழுக்கமும் வாட்டி வதைக்கிறது. இந்த புழுக்கத்தில் கொசுக்கடியில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சரியான தூக்கமும், நிம்மதியும் இல்லாமல் தவிக்கின்றனர்.