

கரோனா வைரஸ் தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்குச் சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டுமென திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தொழில் நகரமான கோவையில் ஊரடங்கு நடைமுறையால் சிறு, குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை உருவானது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கினாலும், தொழில் துறையில் இன்னும் இயல்புநிலை தொடங்கவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் வருவாயின்றித் தவிக்கின்றன.
இந்நிலையில், தங்க நகை தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 11) கூறியதாவது:
"கோவையில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் கோவையில் உள்ள தங்க நகை தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
மேலும், 45 நாள் தொடர் ஊரடங்கு முடிந்து, 50 சதவீத ஆட்களுடன் தொழில்கள் நடைபெறலாம் என்று அரசு உத்தரவிட்டாலும், தொழிலாளர்களுக்குச் சரியான வேலை கிடைக்காததால், வறுமையில் வாடுகின்றனர். கோவையில் தங்க நகை தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீட்டில் தங்கி, வேலை செய்கின்றனர்.
தினசரி வேலை கிடைத்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சரிவர வேலை இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகுந்த வறுமையிலும், மன உளைச்சலிலும் உள்ளனர்.
கோவை நகரில் மட்டும் 30 ஆயிரம் குடும்பங்கள் தங்க நகைத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. தற்போது அரசு நல வாரியத்தில் பதிவு செய்து, புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குவகாத அரசு அறிவித்துள்ளது, தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நலவாரியத்தில் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைப் பணிகள் காலம் தாழ்த்தப்படுகிறது.
எனவே, கோவை மாநகரில் உள்ள தங்க நகை தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ.5,000 வீதம், நான்கு மாதங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். வீட்டில் அமர்ந்து தனியாக தங்க நகை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு. கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், வங்கி மூலம் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்".
இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.