

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி சிபிஐ அதிகாரிகள் முறைப்படி தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையில் ஆய்வாளர்கள் அனுராக் சின்ஹா, பூரன் குமார், உதவி ஆய்வாளர்கள் சுஷில்குமார் வர்மா, சச்சின், காவலர்கள் அஜய்குமார், சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகிய 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் டெல்லியில் இருந்து நேற்று தூத்துக்குடி வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், தடயங்கள், சாட்சியங்கள், சிசிடிவி பதிவுகள் போன்ற வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்தையும் சிபிசிஐடி போலீஸார் சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளுடன், டெல்லி சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை இரவு 9 மணி வரை தொடர்ந்தது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வெடுத்தனர்.
இரண்டாவது நாளான இன்று காலை சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் சாத்தான்குளம் வந்தனர்.
அவர்கள் நேராக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டுக்கு சென்று, ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மகள்கள், உறவினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 4 மணி வரை 5 மணி நேரம் தொடர்ந்தது. ஜெயராஜ் குடும்பத்தினர் தெரிவித்த அனைத்து தகவல்களையும் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடை இருக்கும் பகுதி ஆகிய இடங்களுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிபிசிஐடி அதிகாரிகள் இரண்டு பேர் உடனிருந்து, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
இதேபோல் கோவில்பட்டி கிளை சிறை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில் சிபிஐ சார்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 (1ஏ) (1) பிரிவின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள
வழக்கை, இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக விரைவில் மாற்றுவார்கள் என்றும், ஏற்கனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள போலீஸாரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க, விரைவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிசிஐடி ஐஜி பாராட்டு:
இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிஐ முறைப்படி தொடங்கியதை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று சென்னை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக கடந்த 10 நாட்களாக விசாரணையை சிறப்பாக மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் அனைவருக்கும் ஐஜி சங்கர் வெகுமதி வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.