

கரோனா பொதுமுடக்கக் காலத்திலும்கூட முடங்கிப் போய்விடாமல் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார் திமுக உடன்பிறப்பான தாமஸ் ஆல்வா எடிசன்.
பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரை வாரம் ஒருமுறையாவது, மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்தனர் என்ற செய்தியை நாகை மாவட்டச் செய்திகளில் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, வேளாங்கண்ணியை உள்ளடக்கிய கீழையூர் ஒன்றியத்தில்தான் இப்படி அடிக்கடி இணைப்பு நடப்பதைப் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இன்றும் கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் தலைமையில், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடந்திருக்கிறது.
நாடே கரோனா கவலையில் இருக்கும்போது இப்படிக் கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலைகளில் மெனக்கிடுவது சரிதானா? என்று திமுக ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் கேட்டேன்.
"நாங்கள் எங்கள் இயக்கத்துக்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவர்களே தேடி வருகிறார்கள். கரோனா களத்தில் திமுகவினர் மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து களப்பணி ஆற்றி வருகின்றனர். அதைப் பார்த்து விட்டும், தங்கள் கட்சியின் மீதுள்ள நாள்பட்ட அதிருப்தியாலும் பலரும் திமுகவைத் தேடி வருகிறார்கள்.
பொதுமுடக்கம் எல்லாம் முடியட்டும் என்று சொன்னால்கூட அவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிகக் கூட்டம் இல்லாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்தி வருகிறோம். கரோனா பொதுமுடக்கம் வந்த பிறகு இப்படி ஆயிரம் பேருக்கு மேல் இங்கே திமுகவில் இணைந்திருக்கிறார்கள்" என்றார்.