குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்
Updated on
1 min read

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சான்றிதழ் பெறுவதற்கு மத்திய அரசு புதிய ‘உத்யாம்’ www.udyamregistration.gov.in என்ற இணையதளத்தை ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசு அமைச்சக அறிவிப்பின்படி நிறுவனங்களை வகைப்படுத்தவும் இணையத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெறவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

உத்யோக் ஆதார் மெமோரண்டம் (UAM) சான்றிதழுக்கு பதிலாக உத்யாம் சான்றிதழை பெறும் வகையில் ஜூலை 01-ம் தேதி முதல் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தொழில் மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பெற உத்யாம் இணையதளமான http://www.udyamregistration.gov.in பதிவுசெய்யலாம்.

இப்பதிவை புதுப்பிக்கத் தேவையில்லை. பதிவுக்காக எந்தவொரு ஆவணத்தையோ அல்லது ஆதாரத்தையோ பதிவேற்ற வேண்டியதில்லை. உத்யோக் ஆதார் மெமோரண்டம் சான்றிதழ் வைத்துள்ள நிறுவனங்கள் உத்யாம் இணையதளத்தில் ஜூலை 01ம் தேதி முதல் பதிவு செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட உத்யாம் சான்றிதழ் பதிவு செய்யக்கூடாது. மேலும் 30.06.2020 வரை பதிவு செய்த நிறுவனங்கள் இவ்வறிவிப்பின்படி மறுவரையறை செய்யப்படும். மேலும், இந்நிறுவனங்களின் முந்தைய சான்று 31.03.2021 வரை மட்டுமே செல்லத்தக்கது.

இதில், பதிவு செய்வதற்கு குறு நிறுவனங்கள் இயந்திரங்களின் முதலீட்டுத்தொகை ரூ. ஒரு கோடிக்கு மிகாமலும், ஆண்டு விற்று முதல் ரூ. 5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல், சிறு நிறுவனங்கள் இயந்திரங்களின் முதலீட்டுத்தொகை ரூ.10 கோடிக்கு மிகாமலும், ஆண்டு பற்று முதல் ரூ. 50 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடுத்தர நிறுவனங்கள் இயந்திரங்களின் முதலீட்டுத் தொகை ரூ. 50 கோடிக்கு மிகாமலும், ஆண்டு விற்று முதல் ரூ. 250 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in