சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: கோவில்பட்டி கிளைச் சிறையில் கைதிகளிடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை

கைதிகளை விசாரிக்கச் செல்லும் நடுவர் பாரதிதாசன்.
கைதிகளை விசாரிக்கச் செல்லும் நடுவர் பாரதிதாசன்.
Updated on
1 min read

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன் மரணங்கள் தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் உள்ள கைதிகளிடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் கடந்த மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ் கடந்த 22-ம் தேதி இரவும், ஜெயராஜ் 23-ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன், ஏற்கெனவே, கோவில்பட்டி கிளைச் சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த 9-ம் தேதி கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் - 1 நடுவர் பாரதிதாசன் கோவில்பட்டி கிளைச் சிறையில் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 11) காலை 10.45 மணிக்கு கோவில்பட்டி கிளைச் சிறைக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நடுவர் பாரதிதாசன் சென்றார். அங்கு சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இறப்பு தொடர்பாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்ற சிறை அறைகளில் இருந்த கைதிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். அவர்கள் அளித்த வாக்குமூலத்தை உடனடியாக தட்டச்சர் மூலம் பதிவு செய்துகொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in