கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பெரும்பாலை காவல் உதவி ஆய்வாளர்கள் மீது புகார்; சேலம் டிஐஜி, தருமபுரி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் தருமபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க சேலம் டிஐஜிக்கும், தருமபுரி எஸ்.பி.க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உள்ள அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், இளங்கோவன் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், இளங்கோவன், பெரும்பாலை காவல் நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்தார்.

சிவில் பிரச்சினை தொடர்பான இந்தப் புகார் குறித்து விசாரிக்க காவல் நிலையத்துக்கு வரவழைத்த உதவி ஆய்வாளர்கள் மதியழகன், பெருமாள், சிவகுரு ஆகியோர், தன்னை மிரட்டி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், காவல் நிலையத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்தின்படி, அதிக வட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்ததாகவும், மீதத் தொகையை மூன்று தவணைகளாகத் திருப்பிக் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மீதத் தொகையைப் பின்னாளில் தருவதாகக் கூறி, அதை இளங்கோவனும் ஏற்றுக்கொண்ட நிலையில், காவல் துறையினர் தனது வீட்டுக்கு வந்து மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னைப் பொய் வழக்கில் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலை காவல் நிலையத்தில் நடக்கும் இந்தக் கட்டப் பஞ்சாயத்தைத் தடுக்கக் கோரியும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேலம் டிஐஜிக்கும், தருமபுரி எஸ்.பி.க்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று (ஜூலை 11) விசாரித்த நீதிபதி இளந்திரையன், உதவி ஆய்வாளர்களுக்கு எதிரான புகாரைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க சேலம் டிஐஜிக்கும், தருமபுரி எஸ்.பி.க்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in