Published : 11 Jul 2020 12:21 PM
Last Updated : 11 Jul 2020 12:21 PM

ஆன்லைன் வகுப்பு வரலாறு படைக்கும்விதமாக இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் அளித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் எப்போது வழங்கப்படும்?

14-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடங்கி வைத்த உடன் அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு நடத்தி எங்களுக்கு வரும் 13-ம் தேதி தெரிவிப்பார்கள். அதன்பின்னர் எப்படி வழங்குவது என்பது முடிவெடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகளுக்காக மடிக்கணினி கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளார்களே?

இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக முதல்வர் அதை 14-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். அவர் தொடங்கி வைத்த உடனேயே அவரவர் மடிக்கணினியில் அது டவுன்லோடு செய்யப்படும்.

30 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த திட்டம் உண்டா?

தற்போது மத்திய அரசு பாடத்திட்டம் குறைத்த உடனேயே பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. தற்போது 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் என்ன செய்யலாம் என்பதை முதல்வருடன் ஆலோசனை பெற்று மீண்டும் அந்த முடிவுகளை நாங்கள் மேற்கொள்வோம்.

பாடத்திட்டங்களை வீடுகளுக்கே வழங்கும் திட்டம் உள்ளதா?

அதைப் பற்றித்தான் அந்தக் குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் அதை வெற்றிகரமாகச் செய்யமுடியும். எப்படி அதை வழங்குவது, எப்படி அதை எடுத்துச் செல்வது என்பதில்தான் அனைவரது ஒத்துழைப்பும் இருக்கிறது. மனித நேயத்தோடு உதவ யாராவது முன் வந்தால் அரசு தயாராக இருக்கிறது.

ஒரே வீட்டில் வேறு வேறு வகுப்புகள் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து என்ன முடிவெடுத்துள்ளீர்கள்?

நேரத்தை ஒதுக்குகிறோம். அதற்காக கால அட்டவணை உள்ளது. ஒரு மாணவர் ஒரு வகுப்பு என்றால் அதற்காக தனித்தனி நேரம் ஒதுக்கப்படும்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

இப்போது அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லை.

சென்னை மாநகராட்சிபோல் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செல்போன் வழங்கப்படுமா?

சென்னை என்பது குறிப்பிட்ட எல்லையில் உள்ளது. அங்கு ஆன்லைன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கு முன் நீங்களே இங்கெல்லாம் ஆன்லைன் இல்லை என்று கேள்வி கேட்டீர்கள். தற்போது செல்போன் கொடுப்பது குறித்துக் கேட்கிறீர்கள். ஆனால் சென்னையில் ஆன்லைன் சாதகமாக எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்கவில்லை என்ற பிரச்சினை வருகிறதே?

2 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். சில வரைமுறைகள் கொண்டுவர உள்ளோம். அதை அறிவித்தபின் என்னென்ன குறைகள் உள்ளதன என்பது பற்றிக் கூறுங்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் ஆர்வம் குறைந்து வருகிறதே?

அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். இதற்காகவே அடுத்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கும் நிலை உருவாகும். அதற்கான திட்டங்களை முதல்வர் தீட்டி வருகிறார்.

தனித்தேர்வர்கள் நிலை என்ன?

அதற்கு ஒரு காலவரையறை செய்யப்போகிறோம். தேதியை நிர்ணயிக்கப் போகிறோம். கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி உள்ளது. ஒருபுறத்தில் பெற்றோர் மனநிலை புரிந்து செயல்படவேண்டி உள்ளது. ஆகவே, கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்த பிறகு தனித்தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x