Published : 26 Sep 2015 01:23 PM
Last Updated : 26 Sep 2015 01:23 PM

ஜெயலலிதா ஏன் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்?- விஷ்ணுபிரியா விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், இதற்கு மேலும் எதற்கு ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்? என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின் ஆறாவது நாளான இன்று மதுரை புறநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தார்.

விடியல் மீட்பு பயணத்தை அவணியாபுரம் கிராமத்தில் மக்களோடு இணைந்து நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, பால் வியாபாரிகள் பால் உற்பத்தி விலையை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் அளித்தனர்.

அதற்குப் பிறகு திருப்பரங்குன்றத்தில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

"எதிர்கால தமிழகம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதனால்தான் உங்கள் கருத்துக்களை கேட்க வந்திருக்கிறேன். உங்களுக்கு உரிமை அளித்தார் என்பதை மனதில் வைத்து ஈ.வெ.ராமசாமிக்கே பெரியார் என்று பெயர் சூட்டியவர்கள் நீங்கள். சுயமரியாதையோடு பெண்கள் வாழ வேண்டுமென்றால், திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்'' என்று வலியுறுத்தி பேசினார்.

அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், திருமங்கலம் தேவர் சாலையில், நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தலக்கோட்டை கிராம விவசாயிகளிடம் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

"இந்த பகுதி, வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாயிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. பிறகு வந்த அதிமுக ஆட்சி இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு, உங்கள் வயிற்றில் அடித்துள்ளது. தொழிற்சாலைகள் இந்த பகுதிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நூற்பாலை தொழிற்சாலை கொண்டுவர முயற்சித்த்தையும் இந்த ஆட்சி தடுத்து நிறுத்திவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த திமுக ஆட்சி, மீண்டும் வர நீங்களெல்லாம் ஆதரவு தர வேண்டும்" என்று ஸ்டாலின் பேசினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குச் சென்று வாடிவாசலை பார்வையிட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களுகளிடம் ஸ்டாலின் உரை நிகழ்தினார்.

"ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படுவதற்கு 2009ஆம் ஆண்டு திமுக கொண்டுவந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின் படி கூறப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிமுக அரசு செய்யாததுதான் காரணம். இதை நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி மாதத்திற்குள் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதி பெற்று மதுரை புறநகர் மாவட்ட திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும். அப்போராட்டத்திற்கு நானே தலைமையேற்பேன்'' என்றார்.

மேலூர் பேருந்து நிலையம் சென்று அங்குள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின், அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

''அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் இதுவரைக்கும், 7,150-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாகவும், 19,696 கொள்ளைகள் நடந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பெண் டிஎஸ்பி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், இதற்கு மேலும் எதற்கு ஜெயலலிதா முதல்வர் பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும்?

இவற்றை பற்றி எல்லாம் சட்டமன்றத்தில் பேசாமல், நம்முடைய நமக்கு நாமே பயணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு அமைச்சர், மானிய கோரிக்கைக்கு பதில் அளிக்காமல் நமக்கு நாமே பயணத்தை பற்றி பேசி இருக்கிறார். இதிலிருந்தே நமக்கு நாமே பயணத்தைக் கண்டு அஞ்சி பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகிறது.

கிரானைட் கொள்ளை, நரபலி, சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் கூட இந்த ஆட்சியால் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சி, இனியும் இருப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு நல்லதொரு ஆட்சி அமைய நீங்கள் முன்வருவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்''

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x