சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை திருமழிசை சந்தை வெள்ளக்காடானது

சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை திருமழிசை சந்தை வெள்ளக்காடானது
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய பரவலாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கனமழையால் திருமழிசை காய்கறி சந்தையில் மழைநீர் தேங்கி, அப்பகுதியே வெள்ளக் காடானது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல டன் காய்கறிகள் வீணாகின. விற்பனையும் பாதிக்கப்பட்டது. அப்பகுதிகளில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, மழைநீரை அகற்ற அறிவுறுத்தினர்.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி,சென்னை விமான நிலையம், ஆலந்தூர் ஆகிய இடங்களில் 11 செ.மீ, கிண்டிஅண்ணா பல்கலைக்கழகம் 9, மயிலாப்பூர்(டிஜிபி அலுவலகம்) 6 செமீ, சோழிங்கநல்லூரில் 4 செமீ, புரசைவாக்கத்தில் 3 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கத்தில் 1 செ.மீ. மழை பதிவானது.

புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, பூண்டிபகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்தது.அதே நேரத்தில் சென்னையில் கடலோரப் பகுதிகளில் மழை குறைவாகவே இருந்தது. புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in