

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசுக்கான முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான வி.டி.கோபாலன் மாரடைப்பால் நேற்று காலமானார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷனில் அங்கம் வகித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.டி.கோபாலன்(77). இவர் கடந்த 2000 முதல் 2008 வரைதமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனலராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 1962-ல் வழக்கறிஞர்என்.டி.கிருஷ்ண அய்யங்காருடன் இணைந்து வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய இவர்,அதன்பிறகு மூத்த வழக்கறிஞர்களான ஆர்.கேசவ அய்யங்கார், வி.கே.டி.சாரி, எம்.கே.நம்பியார், எஸ்.மோகன்குமாரமங்கலம், கே.பராசரன், கே.கே.வேணுகோபால் உள்ளிட்டோருடன்் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போதுள்ள நீதிபதிகள், பல மூத்த வழக்கறிஞர்கள் இவரிடம் தொழில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேரவிரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
சேது சமுத்திர திட்ட வழக்கு,புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான வழக்கு, திமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்ந்த வழக்குகள் என பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது மனைவி ராதா கோபாலன் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்கவி என்ற மகள் உள்ளார்.
மறைந்த மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் உடலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில், ‘‘வழக்கறிஞர் சமுதாயத்தில் ‘மரகதமணி’ போல் ஒளிவீசிக் கொண்டிருந்த வி.டி.கோபாலன், கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர். என்னிடம் மிகவும் அன்பு பாராட்டியவரும், நான் மதிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவருமான வி.டி.கோபாலனின் மறைவு வழக்கறிஞர்கள் சமுதாயத்துக்கும், நீதி பரிபாலனத்துக்கும் பேரிழப்பாகும்’’ என்று கூறியுள்ளார்.