

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ-க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்குகளில் ஆகஸ்ட் 12-ல் இறுதி விசாரணை நடைபெறுமென சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு அறிவித்துள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காககவே குட்கா பாக்கெட்டுகளை பேரவைக்குள் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பபட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ-க்கள் 2017 செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர்
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி திமுக எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் சபாநாயகர் சார்பில் தமிழ அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் முறையீடு ஒன்றை செய்தார். அதில், உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்ட பேரவையின் காலம் முடிகின்ற நிலைக்கு வந்துவிட்ட நிலையில், ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் பேரவை உரிமை மீறல் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசு தற்போது குட்கா விவகாரத்தில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து எடுத்து விசாரிக்க வேண்டும் முறையீடு செய்கிறது என குற்றம்சாட்டினர்.
ஆனாலும், விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.