

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும் மரணம் அடைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
வெளிநாடு, மற்றும் சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். துவக்கத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா கடந்த இரு வாரங்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஒரு வாரமாக தினமும் 100 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 24 மணி நேரத்தில் 103 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில், குளச்சல் மார்த்தாண்டம் சந்தைகளுக்கு வந்து சென்ற பலருக்கு கரோனா தொற்று «ற்பட்டுள்ளது. மேல்புறத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ள்ம அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல் உட்பட மாவட்டம் முழுவதும் நகரம், கிராம பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 3 பேர் மரணம் அடைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளச்சல் வாணியக்குடியை சேர்ந்த 85 வயது முதியவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார். அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இறந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
தாழக்குடி பள்ளத்தெருவை சேர்ந்த 74 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு செண்பகராமன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவருக்கு கரோனா தொற்று உறுதி செயயப்பட்டிருந்த நிலையில் இன்று
காலை மரணமடைந்தார். செண்பகராமன்புதூரை சேர்ந்த 60 வயது நபர் நாகர்கோவிலில் உள்ள கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். கோட்டாறில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலை போலீஸார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் குமரியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 பேராக உயர்ந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி தனிமை முகாமில் இருந்த 37 வயது வாலிபர் நேற்று திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
திருவிதாங்கோட்டை சேர்ந்த அவர் சமீபத்தில் துபாயில் இருந்து வந்தபோது கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமை முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அவர் கரோனாவால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 1127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.