Published : 10 Jul 2020 09:02 PM
Last Updated : 10 Jul 2020 09:02 PM

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ரூ.55 கோடி மருத்துவக்கருவிகள் நிலை என்ன?- கரோனா வார்டாக மாற்றப்பட்டதால் பாழாகும் அபாயம்  

தென் தமிழகத்தின் வரப்பிரசாதமாக திகழ்ந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டிடம், ‘கரோனா’ வார்டாக மாற்றப்பட்டதால் அங்கு பயன்பாட்டில் இருந்த ரூ.55 கோடி மதிப்புள்ள உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே எதிரே அரசு ராஜாஜி மருத்துவமனையின் மற்றொரு பிரிவான சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை செயல்படுகிறது. PMSSY என்ற பிரதம மந்திரியின் நிதியில் உருவான உயர் சிகிச்சை மருத்துவதுறைகள் (Super speciality) இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.

தனியார் மருத்துவமனைக்கு நிகரான அனைத்து உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் இந்த கட்டிடத்தில் செயல்பட்டன. எய்ம்ஸ்’ மருத்துவமனையில் உள்ளதுபோன்ற சர்வதேச தரத்தில் ஹைடெக் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இது தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்ந்தது. இந்த மருத்துவமனை முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

அதனால், இந்த கட்டிடத்தில் செயல்பட்ட உயர் சிகிச்சை மருத்துவதுறைகள் (Super speciality) தற்காலிகமாக ராஜாஜி மருத்துவமனையின் பழைய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

ஆனால், அதற்கான சிகிச்சைகள் முன்போல் நடக்கவில்லை. ‘கரோனா’நோய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மற்ற நோயாளிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:

சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் செயல்பட்ட 16 டயாலஸிஸ் கொண்ட சிறுநீரக துறை முடங்கிபோய் உள்ளது. உயிருக்கு ஆபத்தானநிலையில் வரும் ஒரு சிலருக்கு மட்டுமே டயாலிஸிஸ் செய்யப்படுவதால் டயாலிஸிஸ் நோயாளிகள் சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்.

சிறுநீரக கல், கட்டி உள்ளவர்கள் பாடு இன்னும் பரிதாபமாக உள்ளது. ‘கரோனா’ வார்டாக மாற்றப்பட்டதால் சிறுநீரக அறுவை சிகிச்சை துறையும் அதன் நவீன அறுவை சிகிச்சை கருவிகளும் பயன்பாடில்லாமல் உள்ளதால் அவை வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தென்பகுதியில் எங்கும் இல்லாத மைக்ரோஸ்கோபிக் வசதியுடன் கூடிய ஆழமான மூளை பகுதியில் உள்ள கட்டிகளை எடுக்கும் கருவி இந்த கட்டிடத்தில் உள்ளது. அதுபோல், MRI, CT ஸ்கேன்களும் பயன்பாடு இல்லாமல் உள்ளன.

நரம்பியல் மருத்துவ துறையின் வீடியோ EEG என்ற நவீன வலிப்பு நோய் கருவியும்,

குடல் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ துறையின் அத்தனை எண்டாஸ் கோப் கருவிகளும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. ரத்த நாள அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை துறைகளின் மைக்ரோஸ்கோப் அறுவை சிகிச்சை கருவிகளும் நோயாளிகளுக்கான பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த கருவிகளின் மொத்த மதிப்பு ரூ. 55 கோடியாகும்.

இந்த கருவிகள், அதற்கான சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த டெக்னீசியன்களை வைத்து பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனிமையில் வைத்திருக்க வேண்டிய கரோனா நோயாளிகளை பிரதமர் நிதியில் கட்டப்பட்ட அதி நவீன உயர் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மாற்ற யார் அனுமதி கொடுத்திருந்தாலும், மருத்துவமனை நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை மருத்துவ வல்லுநர்கள் மாற்று இடத்தில் ‘கரோனா’ வார்டுகளை உருவாக்கியிருக்க ஆலோசனை கூறியிருக்கலாம்.

‘கரோனா’ தொற்று நோய் அபாயகரமாக கருதப்பட்டதாலும் அந்த நோய்க்கு சாதாரண மருந்து மாத்திரை சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மிக அபூர்வமாகவே நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதனால், இந்த வார்டுகளை எங்கு வேண்டுமென்றாலும் அமைத்து இருக்கலாம். ஆனால், மதுரையின் கனவு திட்டமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டிடத்தில் ‘கரோனா’ வார்டகளை அமைத்திருக்க வேண்டும்.

‘கரோனா’ தொற்று நோய் முடிவுக்கு வந்தப்பிறகு மீண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உடனடியாக செயல்படுத்த முடியாது. மருத்துவ கருவிகள் நிலையை பார்த்து அவை செயல்படுகிறதா? என ஆராய்ந்து அவை செயல்படாவிட்டால் புதிதாக கருவிகள் வாங்க வேண்டிய வரும். வார்டுகளையும் புனரமைக்க வேண்டும். இதற்காக மீண்டும் கோடிக்கணக்கில் மருத்துவத்துறை செலவிட வேண்டிய இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைகள் கிடைக்காத நோயாளிகள், தனியார் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் உயிரிழக்கும் பரிதாபமும் சத்தமில்லாமல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள பல கருவிகள் அந்தந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. தேவைப்படும் நேரத்தில் அந்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

டயாலிஸின் நோயாளிகளுக்கு பழைய கட்டித்தில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. ‘கரோனா’வால் மற்ற சிகிச்சைகள் எதுவும் தடைப்படவில்லை. வழக்கம்போல் நடக்கின்றன, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x