

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று 200-ஐ நெருங்கி வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் செல்வதால் மதுரையைப் போன்று தூத்துக்குடியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பகத்தில் கரோனா தொற்று மிகவும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோர் மூலம் கரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இது கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டியுள்ளது. தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது.
குறிப்பாக சந்தைகள், டீக்கடைகள் போன்ற இடங்களில் இருந்து தான் கரோனா தொற்று அதிகமாக பரவுகிறது. இதனைக் கண்டறிந்து தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் பரிசோதனை செய்வோரில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல பிரையண்ட் நகர் பகுதியில் 20 பேருக்கு தொற்று உறுதியானது. விளாத்திகுளத்தில் 40 வியாபாரிகளுக்கு உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று வரை 1,754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் நேற்று மட்டும் 196 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் இன்றும் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 1949 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்று 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 2 காவலர்களுக்கு தொற்று உறுதியானதால் இன்று அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.
இவ்வாறு கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்த போதிலும் மக்கள் அச்சமின்றி சாலைகளில் கூட்டம் கூட்டாக சுற்றி வருகின்றனர். குறிப்பாக சந்தைகள், வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் தொற்று இன்னும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மதுரையில் அமல்படுத்தப்பட்டது போல தூத்துக்குடியில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.