Last Updated : 10 Jul, 2020 07:18 PM

 

Published : 10 Jul 2020 07:18 PM
Last Updated : 10 Jul 2020 07:18 PM

கட்டுப்பாட்டு பகுதியாக மாறும் திருச்சியின் முக்கிய கடை வீதிகள்; ஜூலை 24-ம் தேதி வரை 5,000 வீடுகளும் முடங்குகின்றன

திருச்சியின் முக்கிய கடை வீதிகள் இன்று இரவு 8 மணி முதல் ஜூலை 24-ம் தேதி வரை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பெரிய கடை வீதி, என்எஸ்பி சாலை, மலைவாசல் மற்றும் இவற்றுடன் வரும் பல்வேறு குறுக்கு வீதிகள் அனைத்தும் முக்கிய கடை வீதிகளாக உள்ளன. இந்த வீதிகளில் மக்களுக்குத் தேவையான அனைத்துவித பொருட்களும் மொத்தம் மற்றும் சில்லறை விலையில் கிடைக்கும் என்பதால் எந்த நேரமும் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்தநிலையில், இந்தப் பகுதியில் உள்ள நகை, ஜவுளி உட்பட பல்வேறு கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 22 பேருக்கு நேற்று (ஜூலை 9) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் கரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் ஜூலை 24-ம் தேதி வரை 14 நாட்களுக்கு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் உள்ள ஜின்னா தெரு, பெரிய கம்மாள தெரு, பெரிய சவுராஸ்டிரா தெரு, ராணி தெரு, சின்ன செட்டித் தெரு, பெரிய செட்டித் தெரு, வெள்ளை வெத்தலைகார தெரு, ஜாபர்ஸா தெரு, சந்துக்கடை, வரதராஜ பெருமாள் கோயில் தெரு, கள்ளத் தெரு, சமஸ்பிரான் தெரு, பந்தேகானா தெரு ஆகிய தெருக்கள் இன்று (ஜூலை 10) இரவு 8 மணி முதல் ஜூலை 24-ம் தேதி வரை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "கரோனா பரவலைத் தடுக்கவே கட்டுப்பாட்டு பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நகைக் கடை, ஜவுளிக் கடை உட்பட 250 கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

மேலும், 3 வார்டுகளில் உள்ள 7,000 வீடுகளில் 5,000 வீடுகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வருகின்றன. கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வீதிகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்படும். எனவே, அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, காய்கனி, மருந்து ஆகிய கடைகளை, கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x