

தமிழகம் முழுவதும் 518 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டம் மூலம் தினமும் 58 ஆயிரம் பக்தர்கள் உணவருந்தி வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் வே.குணசீலன் (வந்தவாசி) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 518 திருக்கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் ரூ. 10 லட்சம் செலவிடப்படுகிறது. தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர். ரங்கம் அரங்கநாதர், பழனி முருகன் ஆகிய 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் ரூ. 2 லட்சம் செலவிடப்படுகிறது. தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.