

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கோவில்பட்டி அரசு மருத்துவமனை நிரம்பியது.
இதனால் தனியார் கல்லூரியில் சிகிச்சை அளிக்க கோவிட் கேர் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கோட்டப்பகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்கள் அனைவரும் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், நேற்று மாலை வரை 102 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், இன்று மட்டும் 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்து நிரம்பி விட்டன. இதனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை தனியார் கல்லூரியில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு கோவிட் கேர் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 180 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், இன்று வரை 68 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேல், சக்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் அவர்கள் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்களுக்கு கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.