Last Updated : 10 Jul, 2020 06:05 PM

 

Published : 10 Jul 2020 06:05 PM
Last Updated : 10 Jul 2020 06:05 PM

கரோனாவிலிருந்து மக்களின் உயிரைக் காக்க முன்னுரிமை கொடுங்கள்; தமிழக அரசுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்

திருச்சி

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களின் உயிரைக் காக்க முன்னுரிமை கொடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ 'ஜூம்' செயலி மூலம் இன்று (ஜூலை10) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

"கரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. இதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பாதிப்பு இருந்த நிலைமை மாறி, இப்போது பக்கத்து வீடு, எதிர் வீடு வரைக்கும் வந்துவிட்டது. நாளை, நம் வீட்டுக்கும்கூட வரலாம் என்பதால் மக்களிடம் அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழலிலும்கூட கரோனா விஷயத்தில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. தொற்று பரவக்கூடிய வேகத்துக்கு இணையான அளவுக்கு, அவற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. பாதிக்கப்படுவோர், இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைத்துக் காட்டப்படுகிறது. ஏன் இப்படி செய்ய வேண்டும்? உண்மையைச் சொல்வதில் என்ன தயக்கம்?

திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 1,170 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் கிடைப்பதில்லை. முன்பு, சென்னையில்தான் இந்த நிலைமை இருந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக திருச்சியிலும்கூட மருத்துவமனைகளில் தங்களைச் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்யுமாறு ஏராளமானோரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டுள்ளன. இது, நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

திருச்சி மாவட்டத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் போதுமானதாக இல்லை. பரிசோதனை மையங்களும் தேவையான அளவுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வரக்கூடிய மாதங்களில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் பாதிக்கப்படுவோரை கண்டறிவதற்கான சோதனை செய்ய, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க போதுமான மருத்துவக் கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.

மேலும், மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு பணிகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என அருகிலுள்ள கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தலாம். அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கலாம்.

அரசைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. மக்களின் உயிர் சார்ந்த பிரச்சினை என்பதால் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கரோனா தொடர்பான அனைத்து விவரங்களையும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

கரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில அரசு நிதி ஒதுக்காமல், உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து செலவிடுகிறது. அப்படியெனில் உள்ளாட்சிகளில் எப்படி அடிப்படை வளர்ச்சிப் பணி செய்ய முடியும்? நிதி பற்றாக்குறை இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். அப்படிப்பட்ட சூழலில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாலங்கள், சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடுவது தேவையா?

முதலில் மக்களின் உயிர்காக்க முன்னுரிமை கொடுங்கள். ஒவ்வொருவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான், இந்தாண்டில் அவர்கள் முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறிக்கோளாகவும், சவாலாகவும் விளங்குகிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x