Last Updated : 10 Jul, 2020 05:54 PM

 

Published : 10 Jul 2020 05:54 PM
Last Updated : 10 Jul 2020 05:54 PM

எந்த கோப்பு அனுப்பினாலும் தடுத்து நிறுத்தி நிர்வாகத்தை முடக்குகின்ற  வேலையை பார்க்கிறார்; கிரண்பேடி மீது நாராயணசாமி புகார் 

எந்த கோப்பு அனுப்பினாலும் தடுத்து நிறுத்தி நிர்வாகத்தை முடக்குகின்ற வேலையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்க்கிறார் என்று மத்திய அமைச்சரிடம் முதல்வர் நாராயணசாமி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி இன்று(ஜூலை 10) கூறும்போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் யாரோடு தொடர்பு கொள்கிறார்களோ அவர்களுக்கு வருகிறது. எனவே தான் மக்கள் வெளியே செல்ல வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

தற்போது ஆயிரத்தைத் தாண்டுகின்ற அளவுக்கு மருத்துவ பரிசோதனையை செய்து வருகிறோம். இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்குமா? இல்லையா? என்ற எண்ணம் உள்ளது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், அன்று அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற கடைகள் திறந்திருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். அவரும் என்னிடம் வலியுறுத்தினார். இதனை கருத்தில் கொண்டு மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது, மக்களின் வாழ்வாதாரமும் நிலையாக இருக்க வேண்டும்.

அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்தாலோசித்தேன். நாம் இந்த கடைகளை மூடுவதன் மூலமாக மட்டும் கரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. கடைகளை மூடுவதன் மூலம் ஓரளவு குறைவு இருந்தாலும் அது முழுமையான காரணமாக இருக்க முடியாது.

மேலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 12) முகூர்த்த நாளாக இருக்கிறது. அன்று நிறைய திருமணங்கள் நடைபெற உள்ளன. இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். அன்று ஊரடங்கை வைப்பதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்காது.

இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷ்ண் ரெட்டியுடன் காணொலி காட்சி மூலமாக புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம், நிதி ஆதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக பேசினேன். குறிப்பாக, நம்முடைய மாநிலத்தில் கரோனா தொற்று சம்பந்தமாக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கமாக கூறினேன்.

மேலும், தமிழகத்தில் பெரிய அளவில் தொற்று பாதித்திருந்தாலும் புதுச்சேரியில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்று கூறினேன். அதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ஆனால், மாநிலத்தின் பல பிரச்சினைகள் உள்துறை அமைச்சகத்தில் தங்கியுள்ளன. ஏ.எப்.டி. மில் நிலம் விற்பது சம்பந்தமான கோப்பு மத்திய அவையில் உள்ளது. அதற்கு முடிவு எடுக்கப்படவில்லை.

அதேபோல், புதுச்சேரி தொழில் முனைவோர் கழக கோப்பும் துணைநிலை ஆளுநரால் அனுப்பப்பட்டு, முடிவு எடுக்க முடியாமல் கிடப்பில் உள்ளது. வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தை விற்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். எந்த கோப்பை அனுப்பினாலும் துணைநிலை ஆளுநர் அதை தடுத்து நிறுத்தி மாறாக உத்தரவை போட்டு நிர்வாகத்தை முடக்குகின்ற வேலையை பார்க்கிறார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்

கரோனா நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டால், அந்த உத்தரவை மீறி துணைநிலை ஆளுநர் மறு உத்தரவை போட்டு அதிகாரிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கிறார். ஏனாம் பகுதியை பொருத்தவரை வெள்ளக்கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசின் நிதியைக் கொண்டு கோதாவரி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

குஜராத் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் இருந்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப்பதற்கு தடை போடுகிறார். இப்படி பல கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி காலதாமதம் ஏற்படுத்தி மாநிலத்தின் நிர்வாகத்தை வீணடிக்கும் வேலையை பார்க்கிறார். தொழிலாளிகளுக்கு ஊதியம் போட நிதி ஒதுக்கினால் அதனை கொடுப்பதற்கு தடையாக இருக்கிறார்.

தொழிற்சாலைகளை மூட உத்தவிடுகிறார். ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதி, வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி, மீனவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவற்றை தடுத்து நிறுத்துகிறார். இப்படி பல திட்டங்களை துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவதால் எங்களுடைய அரசால் செயல்பட முடியாத நிலையிலும், அதனை எதிர்த்து போராட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சிக்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. புதுச்சேரி சுற்றுலா தளமாக இருக்கிறது. அதன் மூலம் மாநிலத்தில் வளர்ச்சியை காணமுடியும். அதற்கு துணைநிலை ஆளுநர் தடையாக இருக்கிறார். புதுச்சேரிக்கு மனமகிழ் திட்டங்களை கொண்டு வர தடையாக இருக்கிறார். மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்றவைகளை கொண்டுவர முடியும். அதனையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை.

அதிகாரிகள் மத்தியில் மெத்தன போக்கு இருப்பதற்கு காரணமே துணைநிலை ஆளுநர் தான் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என அமைச்சரிடம் நான் கூறினேன். அதனை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், 'மத்திய அரசு புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை, நாங்கள் வசூலிக்கின்ற வரியை பார்க்கும் போது ஒரு வருடத்துக்கு ரூ.3,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், ரூ.1,700 கோடி தான் கொடுக்கிறீர்கள். இதனால், மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. 7-வது சம்பள கமிஷன் நிதி, அதிகப்படியான நிதி, டெல்லி ஓய்வூதியர்களுக்கு வழங்கும் நிதி கொடுக்கவில்லை. அங்கு காவல்துறைக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. புதுச்சேரி மாநிலத்துக்குக் கொடுக்கவில்லை.

இப்படி நிதி ஆதாரம் சம்மந்தமாக மத்திய அரசு என்னென்ன திட்டங்களுக்கு நிதி கொடுக்க வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் எங்களை டெல்லிக்கு அழைக்க வேண்டும். அங்கு நானும் அதிகாரிகளும் அமர்ந்து பேசி அதற்கு முடிவு காண முடியும். அப்படி இல்லையென்றால் புதுச்சேரிக்கு நீங்கள் வந்து மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று அமைச்சரிடம் கூறினேன்.

அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். விரைவில் புதுச்சேரியில் மிக விரைவில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற ஒரு நிலையை நாம் உருவாக்க முடியும். பட்ஜெட்டை பொருத்தவரையில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று அதிகாரிகள் கூறினாலும் கூட இதுவரை ஒப்புதலுக்கான உத்தரவு எங்களிடம் வந்து சேரவில்லை.

அதற்கு பிறகுதான் சட்டப்பேரவையை கூட்டமுடியும். எங்களால் காலதாமதம் இல்லை. மத்திய அரசில் பல மாதங்களாக கோப்புகள் டெல்லியில் இருப்பதால் தான் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. அதனை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x