

கோவை மாநகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, அச்சுறுத்தல் உள்ள பகுதி, பொதுவானப் பகுதி என மாநகரை 3 வகையாக பிரித்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம், கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நேற்றைய (ஜூலை 9) நிலவரப்படி 1,026 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 702 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கோவை மாநகரில் மட்டும் இதுவரை 762 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், நோய் தடுப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளதோடு, மாநகரை 3 பகுதிகளாக பிரித்து நோய் தடுப்பு களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
3 வகையாக பிரிப்பு
இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "மாநகரில் அறிகுறியுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் கொடிசியா அரங்கில் உள்ள மையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, அச்சுறுத்தல் உள்ள பகுதி, பொதுவான பகுதி என மாநகரை 3 ஆக பிரித்து தடுப்புப் பணிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்படுகிறது. அங்கு வசிப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இங்கு அனைத்து வகை கடையும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக மக்கள் அதிகமாக கூடும், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதி அச்சுறுத்தல் உள்ள பகுதியாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும், நெருக்கத்தின் காரணமாக விரைவில் மற்றவர்களுக்கு பரவி விடும். மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடங்களை கண்டறிந்து தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்துகின்றனர். இந்தப் பகுதிகளில் 80 சதவீதம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருந்துக்கடைகள், மளிகைக்கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட மணி நேரம் மட்டும் திறந்து இருக்கும். வெளியாட்கள் இங்கு நுழைய அனுமதி கிடையாது. இங்கு வசிப்பவர்கள் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக, அங்குள்ள ஊழியர்களிடம் முறையான தகவல் தந்து விட்டு வெளியே செல்லலாம். ஆர்.ஜி.வீதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மூன்றாவதாக, தொற்று கண்டறியப்படாத, நெருக்கம் குறைந்த பொதுவான பகுதி. இங்கு அரசு கூறிய கட்டுப்பாட்டுகள் பின்பற்றப்படுகின்றன. இப்பகுதியிலும் நோய் தடுப்புப் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பிரித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகர் முழுவதும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என வீடு வீடாக சர்வே செய்யப்படுகிறது. சர்வே செய்யப்பட்ட வீடுகளில் மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. மருத்துவ முகாம்கள் தினசரி மாநகர் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
புதிய செயலி அறிமுகம்
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மேலும் கூறும்போது, "மாநகரில் மருந்து கடைகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், மளிகை பொருட்கள் விற்பனை இடங்கள் போன்றவை குறித்து தெரிவிக்க பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் செயலி பக்கத்தில் இது இணைக்கப்பட்டு, ஓரிரு தினங்களில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.