

கரோனாவால் திருமணங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருமண மண்டபங்களுக்கு அளிக்கப்பட்ட முன்பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கோவை 'சிட்டிசன்ஸ் வாய்ஸ்' நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:
"திருமண ஏற்பாடுகளில் முதன்மையானது, முன்பணம் செலுத்தி மண்டபத்தைப் பதிவு செய்வதுதான். கரோனா ஊரடங்கு உத்தரவால், கடந்த மூன்று மாதங்களில் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது முற்றிலும் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத நிகழ்வு. பெற்றோர்கள் எந்த வகையிலும் இதற்கு காரணமல்ல. எனினும், பல திருமண மண்டபங்கள், தாங்கள் வாங்கிய முன் பணத்தைத் திருப்பித்தர மறுக்கின்றன. இது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
திருமண மண்டபங்கள் தாங்கள் வாங்கிய முன்பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தியிருந்தாலும், அதை அவர்கள் திரும்பப் பெறலாம். எனவே, இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, ரத்து செய்யப்பட்ட திருமணங்களுக்கான முன்பணத்தை உடனடியாக திருப்பியளிக்க உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு சி.எம்.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.