

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவும் ‘கரோனா’ வார்டாக மாறியதால், அங்கு நடந்த உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு முக்கியமானது.
மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களில் நடக்கும் விபத்துகள், மற்ற அவசர சிகிச்சைகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் கரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
அங்கிருந்த எலும்பு முறிவு மற்றும் அவசர அறுவை சிகிச்சை துறைகள் தற்காலிகமாக பழைய மருத்துவ கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பழைய மருத்துவக்கட்டிடத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு மிக குறுகிய இடத்தில் நெருக்கடியான கட்டிடத்தில் செயல்படுகிறது. தற்போது பழைய கட்டிடத்திற்கு
இந்த சிகிச்சைப்பிரிவு கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னாலும்,
அறுவை சிகிச்சை அரங்குகளையோ, கருவிகளையோ மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
அதனால், விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளும் முன்போல் தடையின்றி நடக்குமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து குறைவு என்பதால் விபத்துகள் பெரியளவில் நடக்காமல் இருக்கலாம். ஆனால், வீடுகளில் கீழே விழுந்து காயமடையும் எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கு வழக்கம்போலவே நோயாளிகள் சிகிச்சைகளுக்கு வருகின்றனர்.
ஏற்கெனவே சிகிச்சை பெறும் நோயாளிகளும் உள்ளனர். ஊரடங்கு முடிவுக்கு வரும்பட்சத்தில் வழக்கம்போல் வாகனப்போக்குவரத்து தொடங்கி விபத்துகள் நடந்தால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
தென் மாவட்டங்களில் இருந்து தலை மற்றும் எலும்பு அறுவை சிகிச்சைகளுக்கு அதிகளவு நோயாளிகள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை பரிந்துரை செய்யப்படுவார்கள். தற்போது அவர்கள் அந்தந்த மாவட்டத்திலே கிடைக்கிற சிகிச்சையை பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.
அதனால், கரோனாவைவிட மற்ற சிகிச்சைகள் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.