Last Updated : 10 Jul, 2020 04:54 PM

 

Published : 10 Jul 2020 04:54 PM
Last Updated : 10 Jul 2020 04:54 PM

என்எல்சி தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்

என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமான ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (எ) கல்யாணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலாளர் இரா.முருகப்பன் ஆகியோர் இன்று (10.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

"என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து 3 பொறியாளர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு ஊழலே காரணம் என்பதால், ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

என்.எல்.சி. அனல் மின் நிலையம் 2-ல் கடந்த 01.07.2020 அன்று கொதிகலன் வெடித்து இதுவரையில் 3 பொறியாளர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதேபோல், இதற்கு முன்னர் கடந்த 07.05.2020 அன்று கொதிகலன் வெடித்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய கொதிகலன் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது என்றாலும், அதனைப் பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது அனல் மின் நிலையம் 2-ல் உள்ள கொதிகலன் பகுதியில் கரித்துகள் அகற்றும் ஆண்டுப் பராமரிப்புப் பணி (Yearly Maintanance Work) தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நெய்வேலி அனல் மின் நிலையங்களிலேயே அதிக மின் உற்பத்தியைக் கொடுக்கும் அனல் மின் நிலையம் 2-ல் முழுநேர மனிதவள அதிகாரி இல்லாமல், அதிகப் பணி அழுத்தம் உள்ள தொழில் உறவு அதிகாரியே கூடுதல் சுமையாக இப்பணியைச் செய்து வருகிறார்.

மேலும், தற்போது துணைப் பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) மாதவராஜ், துணைப் பொதுமேலாளர் (பாதுகாப்பு) செல்லச்சாமி ஆகியோர் என்.எல்.சி. நிறுவனத்தின் முழுச் செலவிலேயே தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சியை முடித்தவர்கள். ஆனால், மேற்சொன்ன தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சிப் பெற்ற அதிகாரிகளை மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் பாதுகாப்புப் பணி அல்லாத பிற பணிகளுக்குப் பணியமர்த்தி உள்ளார்.

மேலும், முதல் கொதிகலன் வெடித்து 5 தொழிலாளர்கள் இறந்த போதே இந்த இரு அதிகாரிகளையும் தொழிலகப் பாதுகாப்புப் பணிக்கு மாற்றி நியமித்து இருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் விக்ரமன் அவ்வாறு செய்யவில்லை.

இதனால், மேற்சொன்ன அதிகாரிகளைப் போன்று முழுநேரத் தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சி இல்லாத கீழ்நிலை அதிகாரிகளே தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் பணி செய்து வருகின்றனர். இதனால்தான், மீண்டும் மீண்டும் கொதிகலன் வெடித்து மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறியதால் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஊழல் அதிகாரிகளின் லாப நோக்கினால் வந்த விளைவுகளே ஆகும்.

புகழ்பெற்ற என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் ஊழல் அதிகாரிகளால் சீரழிந்து வருகிறது. மேலும், இதுபோன்ற கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன. பல்வேறு ஊழல், முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்குப் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் கொதிகலன்கள் வெடித்து தொழிலாளர்கள் பலியாவதற்கு ஊழலே முதன்மைக் காரணமாகும். தொழிலாளர்களின் உயிரிழப்பைத் தடுக்க ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு பணி அமர்த்தப்படும் போது போதிய தொழில்நுட்பம் அறிந்த அதிகாரிகளை அந்தந்தத் தொடர்புடைய துறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மேலும், கொதிகலன்கள் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு அளிக்காமல் பொதுத்துறை நிறுவனங்களிடத்திலேயே ஒப்படைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x