

நெல்லை களக்காட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 62 வயதுள்ள நகைக்கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 1409 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் 52 பேர், சேரன்மகாதேவியில் 7, களக்காட்டில் 3, நாங்குநேரியில் 3, மானூரில் 2, பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் 18, பாப்பாகுடியில் 1, ராதாபுரத்தில் 3, வள்ளியூரில் 2 என்று மொத்தம் 91 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1500 ஆகியுள்ளது.
ஆடி அமாவாசை திருவிழா ரத்து
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் பிரசித்திபெற்ற அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் இவ்வாண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா கரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தாமிரபரணியில் நீராடுவது பாரம்பரியமாக நடைபெற்று வந்தது.
இவ்வாண்டுக்கான திருவிழாவுக்கு கால்நாட்டு வைபவம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கரோனாவால் இவ்வாண்டுக்கான திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் திருக்கோயிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.