Last Updated : 10 Jul, 2020 03:54 PM

 

Published : 10 Jul 2020 03:54 PM
Last Updated : 10 Jul 2020 03:54 PM

கும்பகோணம் அருகே தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

தூர்வாரும் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்த இருந்த நிலையில், அவசர அவசரமாக தூர்வாரும் பணியை மேற்கொண்டதால் அப்பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

பாபநாசம் தாலுகா கூனஞ்சேரி கிராமத்தில் கொங்கன் வாய்க்காலிலிருந்து தென்பாதி வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் மூலம் புள்ளபூதங்குடி, நரசிங்கபுரம், ராமசாமிகட்டளை, ஆதனூர், மருத்துவக்குடி ஆகிய கிராமங்களில் சுமார் 900 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

இந்நிலையில், இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நிகழாண்டு தென்பாதி வாய்க்காலை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர் வார ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், துார்வாரும் பணியை தொடங்கவில்லை என கூறியும், இந்த பணியை செய்யாமலே எடுத்துவிட்டதாக நிதியை எடுத்துவிட்டதாக கூறி தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நாளை (ஜூலை 11) நரசிங்கபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டு காவல் துறை, பொதுப்பணித்துறைக்கு மனுவை அனுப்பியிருந்தனர்.

இதற்கிடையில் இன்று (ஜூலை 10) காலை தென்பாதி வாய்க்காலை தூர்வார பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் அங்கு வந்து வாய்க்காலை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தூர்வாரும் இடத்தில் பொதுப்பணித்துறையினரோ, ஒப்பந்தக்காரர்களோ யாருமே வரவில்லை. தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்கள் உரிய பதிலை கூறாததால் விவசாயிகள் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். சுமார் 100 அடி தூரத்துக்கு மட்டுமே தூர்வாரிவிட்டு பொக்லைன் இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து விவசாயி சரபோஜி கூறும்போது, "தென்பாதி வாய்க்கால் தூர்வாராமல் அதற்கான நிதியை எடுத்ததால், விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் அவசர அவசரமாக இன்று காலை தூா்வார இயந்திரத்தோடு வந்தனர். நாங்கள் அளவீடு செய்து தூர்வார கோரினோம். ஆனால், அப்படி முடியாது என கூறிவிட்டனர். நாங்கள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் கொடுத்து விவரம் கேட்டோம். அவர்களும் உரிய பதில் தரவில்லை. எனவே தான் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளோம். இந்த வாய்க்கால் தூர்வாராத காரணத்தால் இதுவரை தண்ணீரும் வரவில்லை. இதனால் இப்பகுதியில் இன்னும் குறுவை சாகுபடியை தொடங்கவில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x